Saturday, September 10, 2011


சித்த மருத்துவக் கல்வியை தமிழக அரசு காப்பாற்றுமா?


சித்த மருத்துவக் கல்வியை தமிழக அரசு காப்பாற்றுமா?

First Published : 05 Sep 2011 01:30:23 AM IST


சென்னை, செப்.4: தமிழகத்தில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில் பல ஆண்டுகளாக இருந்து வரும் முதுநிலை படிப்பு இடங்களில் நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) மாணவர்களைச் சேர்க்க மத்திய இந்திய மருத்துவக் கவுன்சில் (சிசிஐஎம்) அனுமதி மறுத்துள்ளது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் மிகப் பழமையான பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி, சென்னை அரும்பாக்கம்சித்த மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) முதுநிலை சித்த மருத்துவப் பிரிவுகளுக்கு உரிய 140 இடங்களில் மாணவர்களைச் சேர்க்க
அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
47 ஆண்டுக்கால கல்லூரி: திருநெல்வேலி பாளையங்கோட்டையில் 1964-ல் அரசு சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்த அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த பல
ஆண்டுகளாக சித்த மருத்துவப் பிரிவில் எம்.டி. (பொது மருத்துவம்), எம்.டி. (குணபாடம்), எம்.டி. (சிறப்பு மருத்துவம்), எம்.டி. (குழந்தை மருத்துவம்), எம்.டி. (நஞ்சு மருத்துவம்), எம்.டி. (நோய் நாடல்) என ஆறு முதுநிலை பாடப் பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தலா 20 மாணவர்கள் வீதம் மொத்தம் 120 பேர் தொடர்ந்து படித்து வருகின்றனர்.
இதே போன்று சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்.டி. (பொது மருத்துவம்), எம்.டி. (குணபாடம்) ஆகிய இரண்டு பிரிவுகளில் தலா 10 மாணவர் வீதம் மொத்தம் 20 பேர் படித்து வருகின்றனர். நடப்புக் கல்வி ஆண்டில் இந்த முதுநிலை படிப்பு இடங்களில் மாணவர்களைச் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மருத்துவத்துக்கு மேலும் சறுக்கல்: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திலும் ("அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை'), பாளையங்கோட்டையைப் போன்று ஆறு முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் உள்ளன. ஒவ்வொரு முதுநிலை பிரிவிலும் தலா 8 இடங்கள் வீதம் மொத்தம் 48 இடங்கள் இருந்தன.
ஆனால், இந்த முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களின் எண்ணிக்கையையும் நடப்புக் கல்வி ஆண்டில் 48-லிருந்து 25-ஆக மத்திய இந்திய மருத்துவக் கவுன்சில் குறைத்துள்ளது.
இதுவரை இருந்த 6 முதுநிலை பாடப் பிரிவுகளில், 4 முதுநிலை பாடப் பிரிவுகளில் மட்டுமே மாணவர்களைச் சேர்க்க அது அனுமதி வழங்கியுள்ளது.
முதுநிலை சித்த மருத்துவப் பிரிவான குழந்தை மருத்துவம் (எம்.டி.-குழந்தை மருத்துவம்) படிப்புக்கு உரிய 8 இடங்களுக்கும், முதுநிலை நோய் நாடல் மருத்துவம் (எம்.டி.-நோய் நாடல்) படிப்புக்கு உரிய 8 இடங்களுக்கும் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என மத்திய சித்த மருத்துவக் கவுன்சில் கூறியுள்ளது.
எம்.டி. (பொது மருத்துவம்) படிப்பு இடங்களை 8-லிருந்து 6-ஆகவும், எம்.டி. (குணபாடம்) படிப்பு இடங்களை 8-லிருந்து 5-ஆகவும், எம்.டி. (சிறப்பு மருத்துவம்) படிப்பு இடங்களை 8-லிருந்து 7-ஆகவும், எம்.டி. (நஞ்சு மருத்துவம்) படிப்பு இடங்களை 8-லிருந்து 7-ஆகவும் மத்திய இந்திய மருத்துவக் கவுன்சில் குறைத்துள்ளது.
காரணம் என்ன? பேராசிரியர்-விரிவுரையாளர் போதிய எண்ணிக்கையில் இல்லாமை, மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாமை, ஆய்வுக்கூட வசதியின்மை உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதியின்மையைக் காரணம் காட்டி முதுநிலை படிப்பு இடங்களுக்கான அனுமதியை அது ரத்து செய்துள்ளது அல்லது குறைத்துள்ளது. முதுநிலை (எம்.டி.) சித்த மருத்துவ இடங்கள் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகளில் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஆண்டுதோறும் அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் பட்டப்படிப்பு (பி.எஸ்.எம்.எஸ்.) முடிக்கும் நூற்றுக்கணக்கான சித்த மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
உடனடி தீர்வு என்ன? எம்.பி.பி.எஸ்.-எம்.டி. படிப்புக்கு உரிய தரத்துக்கு இணையாக ஆசிரியர்-மாணவர் விகிதம் உள்ளிட்டவற்றில் மத்திய இந்திய மருத்துவக் கவுன்சில் கடுமையான விதிகளை ஏற்படுத்தி படிப்பு இடங்களுக்கான ஒப்புதலை வழங்கி வருவதாக சித்த மருத்துவக் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
எனவே சித்த மருத்துவப் பிரிவு முதுநிலை இடங்களுக்கான அனுமதியை மத்திய இந்திய மருத்துவக் கவுன்சிலிடமிருந்து பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனடியாக எடுக்க வேண்டும்.
அதாவது, மத்திய இந்திய மருத்துவக் கவுன்சில் எதிர்பார்க்கும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் ஏற்படுத்துவதாக உறுதி அளித்து, முதுநிலை சித்த மருத்துவப் படிப்பு இடங்கள் பறி போகாமல் தடுக்க வேண்டும்.
நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) முதுநிலை சித்த மருத்துவப் படிப்பு இடங்களில் மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்' என்று சித்த மருத்துவக் கல்வியாளர்கள் கேட்டுக் கொண்டனர்.

No comments:

Post a Comment